மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது தமது திருவடியை பகவான் வைத்ததால் அவரது திருவிக்கிரம கோலத்தை தாம் தரிசிக்க முடியவில்லை. ஆகையால், அந்த கோலத்தை தமக்கு காட்டியருள வேண்டும் என்று பிரார்த்தித்தப்படியால் அந்த அவதாரத்தை ஸத்யவிரத க்ஷேத்திரமான திருக்கச்சியில் காண்பித்ததாக தல வரலாறு கூறுகிறது.
மூலவர் திரிவிக்கிரமன், உலகளந்த பெருமாள் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் பேரகத்தான். தாயார் அமுதவல்லி நாச்சியார், அம்ருதவல்லி என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றார். ஆதிசேஷனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திரிவிக்கிரம கோலத்தை தாமும் காண வேண்டும் என்று ஆதிசேஷன் பகவானைப் பிரார்த்தித்ததால் அவருக்கும் பிரத்யக்ஷமான ஸ்தலம். மூலவர் சன்னதி அருகிலேயே ஆதிசேஷனுக்கும் சன்னதி உள்ளது.
இந்த ஸ்தலத்திலேயே திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்களும் உள்ளன.
திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் 2 பாசுரங்களுமாக மொத்தம் 6 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|